குற்றங்களும் தண்டனைகளும்


Readers' space Oct 2, 2020

குற்றம் ஒன்று புரிந்தவனைக்
கூண்டினுள்ளே போட்டு அடைத்தால்
குற்றங்கள் குன்றுமா என்ன?!
மன மாற்றம் ஒன்றே
யுக மாற்றத்தின் வித்தாகும்!
ஒரு மனிதனாக வாசியுங்கள்…….
நீதிபதியாகவோ வழக்கறிஞராகவோ அல்ல!!
கொலை ஒன்று புரிந்தவனுக்குச்
சாவின் வலியை உணர்த்திடும்…….
கொலைகள் மீண்டும் நிகழா!!
கொன்று குவிக்கும் தீவிரவாதியைப்
பிரசவ அறைக்கு இட்டுச்செல்லுங்கள்……
உயிரை உருச்செய்யும் வலியறிந்தால்
உயிரினை அழிக்கத் துணியமாட்டான்!!
கற்பினைக் கலங்கடிக்கும் காமுகனுக்கு
அன்னையவள் அப்பழுக்கற்ற அன்பினை
அளவின்றி அளித்துப் பாருங்கள்.......
உண்மைச் சுகம் யாதென்றறிவான்!!
குழந்தைகளைக் குலைக்கும் கொடியோனுக்கு
மழலையின் மாசற்ற அன்பை
அள்ளிக் கொடுத்துப் பாரும்……..

குழந்தைகளைக் கொண்டாடி மகிழ்வான்!!
முடிந்த அளவுக்குச் சொல்லித் தாருங்கள்……
குற்றம் நிகழ்வதற்கு முன்பே!!
அன்னையரே நும்பிள்ளையரிடம் பகரும்……
கொங்கையென்பது காமத்திற்கான பொருளல்ல……
அன்னைவடிவம் பூண்ட ஆண்டவன்
அவனிஉய்க்க அமுதளிப்பதற்கு என்று!!
பெண் பூப்பெய்தி வலிபொறுப்பதெல்லாம்
தீட்டெனத் திட்டுவதற்கு அல்ல……..
தரணி தழைக்கச் செய்வதற்கென்று!!
ஆணும்பெண்ணும் கூடிக் கலப்பதை
ஆபாசமெனுந் திரைதனை விலக்கி……
அனைத்துயிர்க்கும் அடிநாதமென விளக்குங்கள்!!
அனைத்து இங்கு இயல்பானால்
குற்றங்கள் இனி ஏது?
மறைத்தல் குற்றத்தின் குறியீடு……
அன்பை நிறைவாய் ஊட்டுங்கள்!
ஆண்பிள்ளையை ஆணாக அல்லாது,
பெண்பிள்ளையைப் பெண்ணாக அல்லாது,
இருவரையும் மனிதனாக வளருங்கள்!
ஒப்புக்கொள்ளல் கடினம் தான்…….
மறைத்தலே குற்றத்தின் வித்து!

தக்க சமயத்தில் தக்க விடயங்களை
தகுந்த பொருள்கொண்டு தங்கள் பிள்ளைகளிடம் பகிர்ந்துவிட்டால்….
நீதி மன்றங்களுக்கு நிவாரணம்!!

Tags